தமிழகத்தில் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்கும் - ஆவின் விளக்கம்
தமிழ்நாட்டில் அண்மை காலமாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த நிலையில் தற்போது ஆவின் நிர்வாகம் தரப்பில் அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிராமப்புற பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்றது. ஒரு சில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை தவிர இதர சங்கங்களில் வழக்கமான அளவிற்கு பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கினார்கள். ஆவின் மற்றும் பால்வளத்துறையின் கள அலுவலர்கள், சங்கங்களில் முழுமையாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்று ஆவின் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
பால் நிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்ய முயற்சி
இதனை தொடர்ந்து அந்த விளக்க அறிக்கையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பால் நிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த முயற்சிகள் அனைத்தும் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. எனவே ஆவின் பால் விற்பனை எவ்வித தடையும், தட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து வரும் வதந்திகள் மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழக மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று கூறி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.