'சந்திரயான் 3' தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த நிறுவனத்தின் சோக நிலை
கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. 2 ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி விண்கலம், விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்து இந்திய மக்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது. இது சந்திரனை சென்றடைய இன்னும் 40 நாட்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களும் விஞ்ஞானிகளும் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. சந்திரயான் 3ன் ரோவர் நிலவில் பத்திரமாக தரை இறங்கிவிட்டால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவில் ஆராச்சியை தொடங்கும் அடுத்த நாடாக இந்தியா இருக்கும்.
17 மாதங்களாக சம்பள பாக்கி வைத்திருக்கும் நிறுவனம்
இந்நிலையில், 'சந்திரயான் 3' தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த ஒரு நிறுவனத்தின் அவல நிலை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இயங்கி வரும் ஒரு கனரக பொறியியல் நிறுவனம் தான் சந்திரயான் 3 விண்கலத்தின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தது. மத்திய கனரக தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் நிறுவனமான இது, 17 மாதங்களாக அதன் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது சுமார் 3000 பேர் வேலை செய்து வருகின்றனர். ஆனால், தங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்ய வில்லை என அமைச்சகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.