வக்ஃப் வாரியத்தின் வரம்பற்ற அதிகாரத்திற்கு கடிவாளம் போடும் மத்திய அரசு
எந்தவொரு சொத்தையும் வக்ஃப் சொத்தாக அறிவித்து, அதை தனதாக்கிக் கொள்வது உள்ளிட்ட வக்ஃப் வாரியங்களின் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு புதிய மசோதாவை பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, வக்ஃப் வாரியங்களின் அதிகார வரம்பை கட்டுப்படுத்துவது உட்பட, சுமார் 40 திருத்தங்களை வக்ஃப் சட்டத்தில் அமைச்சரவை விவாதித்துள்ளது. தற்போது, இந்த வாரியங்கள் நாடு முழுவதும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கட்டுப்படுத்துகின்றன. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் வக்ஃப் வாரியங்களின் சொத்துக்கள் மீதான உரிமைகோரல்களை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும். அவை முன்பு எந்த சரிபார்த்தலும் இல்லாமல் வக்ஃப் வாரியத்தில் சேர்க்கப்பட்டன.
வக்ஃப் வாரியங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் மசோதா
இந்த சரிபார்ப்பு நடைமுறை வக்ஃப் வாரியங்கள் மற்றும் சொத்தின் தனிப்பட்ட உரிமையாளர்கள் இருவரும் உரிமைகோரல்கள் மற்றும் எதிர் உரிமைகோரல்களைச் செய்த சொத்துக்களுக்கும் நீட்டிக்கப்படும். முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, வக்ஃப் வாரியங்களின் சொத்துக்கள் மீதான உரிமைகோரல்கள் கட்டாயமாக சரிபார்க்கப்படும். அதேபோல், வக்ஃப் வாரியங்களின் சர்ச்சைக்குரிய சொத்துக்களுக்கும் கட்டாய சரிபார்ப்பு முன்மொழியப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. தற்போது, இந்தியா முழுவதும் 8.7 லட்சத்துக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளிட்ட மொத்தம் சுமார் 9.4 லட்சம் ஏக்கர் நிலங்கள் வக்ஃப் வாரியத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவையாக உள்ளன. இந்த அதிகார கட்டுப்பாடு மட்டுமல்லாது, வக்ஃப் வாரியங்களின் அமைப்பிலும் மாற்றங்களை மேற்கொண்டு பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் விதிகளும் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.