இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு!
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாட்டு மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் இலவச ரேஷன் திட்டம் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சாமினிய மக்களின் சிரமத்தைப் போக்க உணவு பாதுகாப்பு சட்டம் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. 2020ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்திற்கு கீழ் அரிசி மற்றும் தானியங்கள் மிக மிக குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு கொண்டிருந்தது. 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டதால் இந்த பொருட்களை மத்திய அரசு இலவசமாக வழங்க தொடங்கியது. இதற்கு ஏழைகள் நலன் சட்டம் என்ற பெயரும் வைக்கப்பட்டது. இந்த ஏழைகள் நலன் சட்டம் மூலம் இலவசமான உணவு பொருட்கள் இப்போது வரை வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
இந்நிலையில், நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இதைப் பற்றி விவாதித்த அமைச்சர்கள், இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த திட்டத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். உணவு பாதுகாப்பு சட்டமும் ஏழைகள் நலன் சட்டமும் ஒன்றாக இணைக்கப்பட்டு அடுத்த வருடம், அதாவது 2023 டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 81.3 கோடி மக்கள் பயனடைகின்றனர். இதற்கு தேவையான மொத்த செலவையும் சமாளிக்க இந்த திட்டத்தின் பட்ஜெட் ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.