உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் உசேன், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக பிராந்திய மொழிகளை பயன்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துபூர்வமாக தனது பதிலினை அளித்துள்ளார். அந்த பதிலில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்னும் விதி உள்ளது. ஆனால் அரசியலமைப்பு சட்டம் 348(1)(a) கீழ் மாநில உயர்நீதிமன்றங்கள் உரிய அனுமதி பெற்று வழக்காடு மொழியினை தங்கள் பிராந்திய மொழிகளில் மாற்றி கொள்ளலாம். அதன்படி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழி பயன்படுத்தலாம் என அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகம் அனுப்பிய கோரிக்கை கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை
தொடர்ந்து பேசிய அவர், இதே போல் தமிழ்நாடு, குஜராத், கொல்கத்தா, சத்தீஸ்கர், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களும் தங்கள் தாய்மொழியினை வழக்காடு மொழியாக பெற அனுமதி கோரியது. ஆனால் இது குறித்த ஆலோசனையின் போது உச்சநீதிமன்றம் அனுமதியளிக்க மறுத்தது. இருப்பினும் தமிழகம் மீண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியது. அதில் உழைநீதிமன்ற தலைமை நீதிபதியின் முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் 2ம் கோரிக்கையின் போதும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளிக்க வேண்டாம் என கூறியதால் தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்க முடியவில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.