மெய்தெய் மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிபிஐயால் கைது
மணிப்பூர் மாநிலத்தில் 2 மெய்தெய் மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்தாவது குற்றவாளியை சிபிஐ கைது செய்துள்ளது. கடத்தப்பட்ட இரண்டு மாணவர்களும் கடந்த ஜூலை 6 ஆம் தேதி முதல் மாயமானர். புனேவில் கைது செய்யப்பட்ட பாவ்ளுன் மங், சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, அக்டோபர் 16 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்டதில் பாவ்ளுன் மங்கின் முக்கியமானது என சிபிஐ தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி, இந்த வழக்கில் நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விசாரணையில் இதுவரை வெளிவந்த தகவல்கள்
சிபிஐ விசாரணையில், டேக்யல் பகுதியை சேர்ந்த 20 வயதான ஃபிஜாம் ஹேமன்ஜித் சிங் மற்றும் தேரா பகுதியைச் சேர்ந்த 17 வயதான லுவங்க்பி ஹிஜாம் ஆகிய இருவரும் குக்கி போராளிகளால் ஜூலை 6 ஆம் தேதி கடத்தப்பட்டனர். சிபிஐ, அவர்கள் பிணங்களை இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இவர்களது புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி இவர்கள் கொல்லப்பட்டதை உறுதிசெய்தது. கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி, மாநில அரசு, இணைய சேவைகளை மீண்டும் வழங்கியதற்கு இரண்டு நாட்கள் கழித்து, இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் பரவத் தொடங்கின. ஒரு புகைப்படம் இவர்கள் காட்டிற்குள் தரையில் அமர்ந்திருப்பது போன்றதும், மற்றொரு புகைப்படம் இவர்கள் கொல்லப்பட்டு இருப்பது போன்றும் வெளியானது குறிப்பிடத்தக்கது.