மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம்
ரயில்வே பாதைகளில் மாடுகள் போன்ற கால்நடைகள் கடந்து செல்கையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதன்படி நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர், மும்பை மற்றும் காந்திநகர் இடையில் செயல்பட்ட வந்தேபாரத் ரயில் பாதையில் மாடு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க வேலியமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேற்கு ரயில்வே கோட்டத்தின் பொது மேலாளர் அசோக் குமார் மிஸ்ரா, மும்பை-காந்திநகரின் ரயில்பாதை இடையே 1.5 மீட்டர் உயரத்திற்கு ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வேலிகள் அமைக்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது என்று முன்னதாக தகவல் தெரிவித்திருந்தார்.
ரூ.245.26 கோடி செலவில் வேலி அமைக்கும் பணி
இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, மும்பை-அகமதாபாத் இடையே 622 கி.மீ., தொலைவுள்ள வந்தே பாரத் ரயில் பாதை மிக முக்கிய வழித்தடமாகும். அதனால் வேலி அமைக்கும் பணியினை ரயில்வே துறை ரூ.245.26 கோடி ஒதுக்கி மேற்கொண்டு வருகிறது. இப்பணியை மேற்கொள்ள 8 நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. மும்பை-அகமதாபாத் ரயில் பாதையிலேயே ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விரைவில் புல்லட் ரயில் இயக்கப்படவுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் இந்த வேலிகள் மனிதர்கள் மட்டும் கடக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. அதனால், இந்த வேலிகள் ஏரேடைனமிக் டிசைன் கொண்டு வகுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.