
கரூர் கூட்ட நெரிசல்: தவெக நிர்வாகிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு
செய்தி முன்னோட்டம்
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம் தொடர்பாக, காவல்துறை தற்போது தவெக கட்சித் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. காவல்துறையின் அறிக்கையின்படி, கொலை முயற்சி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாமை மற்றும் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட மரணங்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை நடத்திய கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் உள்ளிட்ட உள்ளூர் தவெக நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் சிலரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்ட நெரிசல்
கூட்ட நெரிசலுக்குக் காரணம்
சனிக்கிழமை (செப்டம்பர் 27) மாலை கரூரில் நடந்த இந்தக் கூட்டத்திற்கு, திரளான மக்கள் கூட்டம் திரண்டபோது, ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் நெரிசலே இந்தத் துயரத்திற்கு முக்கியக் காரணம் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி மக்கள் திரண்டபோதும், கூட்ட மேலாண்மை மற்றும் அவசர கால வெளியேற்றத்திற்கான சரியான ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.