செந்தில் பாலாஜி பதவி நீட்டிப்பிற்கு எதிரான வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைப்பு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பதனை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகள் இன்று(ஜூலை.,21)விசாரணைக்கு வந்த நிலையில், ஒரு மாதத்திற்குமேல் காவலிலுள்ள செந்தில் பாலாஜி எவ்வாறு இலாகா இல்லா அமைச்சராக தொடரமுடியும்? என்று ஜெயவர்த்தன் தரப்பில் வாதாடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, 2 வருட சிறைக்கு குறைவாக தண்டனைப்பெற்றவர்கள் பதவியில் நீடிக்கலாம் என்னும்பட்சத்தில், எந்த சட்டத்தின் அடிப்படையில் அவர் தகுதி இழந்தவரானார்? என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, கேள்வியினை எழுப்பியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து தமிழக அரசின் வாதங்களுக்காக, இவ்வழக்கு அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.