மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார் முதலியன தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள் மதுபான கடை முன்பும், சாலையோரங்கள் மற்றும் அருகில் உள்ள கடை வாசலில் நின்று மது அருந்துகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று புகார்கள் எழுகிறது. இது குறித்து திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு இது குறித்து விசாரித்தனர்.
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்
முன்னதாக இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடும் மற்றும் திறக்கும் நேரத்தை நிர்ணயம் செய்வது எல்லாம் தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தாங்கள் தலையிட முடியாது என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது ஏற்கனவே தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்னதாக மூடுவது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, இவ்வழக்கினை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.