Loading...
பிரிக்ஸ் மாநாட்டில் தமிழர்களின் பாரம்பரியம்; உலகத் தலைவர்களை ராமேஸ்வரம் கோவில் பின்புலத்துடன் வரவேற்ற பிரதமர் மோடி
பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோவில் பின்புலம்

பிரிக்ஸ் மாநாட்டில் தமிழர்களின் பாரம்பரியம்; உலகத் தலைவர்களை ராமேஸ்வரம் கோவில் பின்புலத்துடன் வரவேற்ற பிரதமர் மோடி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 12, 2026
06:18 pm

செய்தி முன்னோட்டம்

புதுடெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்று வரும் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், தமிழ்நாட்டின் ஆன்மீகப் பெருமையை சர்வதேச அளவில் பறைசாற்றும் வகையில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டிற்கு வருகை தந்த உலகத் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்ற நிகழ்வில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவிலின் பிரம்மாண்டமான படம் பின்புலமாக அமைக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் தொன்மையான கலாச்சாரத்தை உலகரங்கில் வெளிப்படுத்திய இந்த நிகழ்வு சர்வதேச ஊடகங்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதேபோல் ஆடும் நடராஜர் சிலையும் பாரத மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உற்சாக வரவேற்பு

சீன அதிபர் உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு

பாரத மண்டபத்தின் முதன்மை நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த ராமேஸ்வரம் கோவில் பின்புலத்தின் முன்னின்று, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கை குலுக்கி வரவேற்றார்.

இந்தியாவின் ஆன்மீக மரபையும் கட்டடக்கலையையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த வரவேற்புப் பகுதி, மாநாட்டிற்கு வந்த அனைத்துத் தலைவர்களையும் பெரிதும் கவர்ந்தது.

சர்வதேச மாநாட்டில் தமிழ்நாட்டின் பாரம்பரிய சின்னம் முதன்மைப் படுத்தப்பட்டது இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரிக்ஸ் தலைவர்கள்

உலகளாவிய ஆளுகை குறித்த பிரிக்ஸ் தலைவர்களின் ஆலோசனை

வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, பாரத மண்டபத்தில் உள்ள பிரதான மாநாட்டு அரங்கில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

"உலகளாவிய ஆளுகை மற்றும் பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்" என்ற முதன்மைத் தலைப்பில் உலகத் தலைவர்கள் அனைவரும் தீவிரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

இந்த ஆலோசனையின் போது சர்வதேச நிதி அமைப்புகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் வளரும் நாடுகளுக்கான முக்கியத்துவம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கலாச்சார ஈர்ப்பு

இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மற்றும் கலாச்சார ஈர்ப்பு

இம்மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்தும் பல முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் கோவில் பின்புலம் சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டதன் மூலம், இந்தியக் கலாச்சாரத்தின் மீதான ஈர்ப்பு சர்வதேச அளவில் மேலும் அதிகரித்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்று நடத்தும் இந்த வேளையில், நாட்டின் அனைத்துப் பிராந்தியப் பண்பாடுகளுக்கும் உலக மேடையில் சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT