Loading...
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் கடும் கண்டனம்! புதுடெல்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட உறுப்பு நாடுகள்; முழு விபரம்
புதுடெல்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட உறுப்பு நாடுகள்

பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் கடும் கண்டனம்! புதுடெல்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட உறுப்பு நாடுகள்; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 12, 2026
06:02 pm

செய்தி முன்னோட்டம்

புதுடெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிறைவில், இந்தியாவின் ராஜதந்திரத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் புதுடெல்லி பிரகடனம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாற்றமடைந்து வரும் தற்போதைய சர்வதேச சூழலை மிகவும் பழமையான அமைப்புகளால் வழிநடத்த முடியாது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, பிரதிநிதித்துவம் மற்றும் விதிகளை உருவாக்குவதில் அவசியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். எதிர்காலத் தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச விதிகளை வகுப்பதில் குளோபல் சவுத் நாடுகளுக்கு சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.

கண்டனம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனம்

கடந்த 2025 ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பேரின் உயிரைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் தங்களது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை சகித்துக் கொள்ள முடியாது என்றும், பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பது மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தத் தீர்மானம் பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

ஐநா சீர்திருத்தம்

ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளில் சீர்திருத்தம்

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர் அல்லது கூடுதல் அதிகாரப் பொறுப்புகளைப் பெறுவதற்கான தங்களின் ஆதரவை ரஷ்யா மற்றும் சீனா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும், ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரிக்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.

சர்வதேச வர்த்தகத்தில் ஒருதலைப்பட்சமாக விதிக்கப்படும் வரிகளை எதிர்த்துள்ள உறுப்பு நாடுகள், அமெரிக்க டாலருக்கு மாற்றாகத் தங்களின் உள்ளூர் நாணயங்கள் மூலம் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை மேலும் விரிவுபடுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளன.

ADVERTISEMENT

தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு மேலாண்மை மற்றும் சர்வதேச வர்த்தகம்

சர்வதேச அளவில் நிலவும் மோதல்களையும் போர்களையும் தூதரகப் பேச்சுவார்த்தை மூலமாகவே அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என பிரிக்ஸ் பிரகடனம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொழில்நுட்பத் துறையில் முக்கியக் காரணியாக உருவெடுத்து வரும் செயற்கை நுண்ணறிவை நிர்வகிப்பதில் அனைத்து நாடுகளுக்கும் சம பங்கு இருக்க வேண்டும் என்றும் உறுப்பு நாடுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

இந்தியாவின் தலைமையில் எட்டப்பட்டுள்ள இந்த புதுடெல்லி பிரகடனம், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள மாபெரும் ராஜதந்திர வெற்றியாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT