LOADING...
மல்லையாவிற்கு முட்டுக்கட்டை போட்ட ஹைகோர்ட்: "இந்தியா வாங்க.. அப்புறம் பேசலாம்!"
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

மல்லையாவிற்கு முட்டுக்கட்டை போட்ட ஹைகோர்ட்: "இந்தியா வாங்க.. அப்புறம் பேசலாம்!"

எழுதியவர் Venkatalakshmi V
Feb 12, 2026
06:52 pm

செய்தி முன்னோட்டம்

லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, தன்னை 'பொருளாதாரக் குற்றவாளி' (Fugitive Economic Offender) என அறிவித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மல்லையா நேரில் இந்தியா வராதவரை, அவரது மனுவை விசாரிக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் நீதிபதி கௌதம் அங்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு, "நீங்கள் முதலில் இந்தியா திரும்ப வேண்டும். அவ்வாறு வர தயாராக இல்லை எனில், இந்த மனுவை எங்களால் விசாரிக்க முடியாது" என்று மல்லையா தரப்பிற்கு தெரிவித்தது. மேலும், அவர் நீதிமன்ற நடைமுறைகளை தவிர்க்கிறாரா என்பதை பதிவு செய்ய நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

வாதம்

அரசு தரப்பு வாதம் மற்றும் வழக்கின் பின்னணி 

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மல்லையா நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும். லண்டனில் நடக்கும் நாடு கடத்தல் வழக்குகளின் இறுதி கட்டத்தை அவர் நெருங்கியுள்ளதால், தற்போது அங்கிருந்தபடியே இந்த சட்டப் பிரிவுகளை அவர் எதிர்க்கிறார்" என்று வாதிட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு வங்கிக் கடன்களை திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பியோடினார். 2018ஆம் ஆண்டு பொருளாதார குற்றவாளிகள் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர், 2019ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் இவரை 'பொருளாதாரக் குற்றவாளி' என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 70 வயதாகும் விஜய் மல்லையா, தற்போது இச்சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையையும், தனக்கு வழங்கப்பட்ட முத்திரையையும் எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Advertisement