Loading...
லேண்டிங் நேரத்தில் ஆட்டோபைலட் ஆஃப்! போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு; இந்தியாவில் 96 விமானங்கள் பாதிப்பு
போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு

லேண்டிங் நேரத்தில் ஆட்டோபைலட் ஆஃப்! போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு; இந்தியாவில் 96 விமானங்கள் பாதிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2026
12:51 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், தனது 737 மேக்ஸ் ரக விமானங்களின் தானியங்கி வழிசெலுத்தல் அமைப்பில் மென்பொருள் கோளாறு இருப்பதைக் கண்டறிந்துள்ளது. லேண்டிங் முயற்சியை ரத்து செய்துவிட்டு மாற்றுப் பாதையில் செல்லும்போது, ஆட்டோபைலட் அமைப்பு தானாகவே செயலிழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கல் குறித்து போயிங் நிறுவனம் அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா

இந்தியாவில் 96 விமானங்கள் பாதிக்கும் அபாயம்

இந்த மென்பொருள் கோளாறால் இந்தியாவில் இயங்கும் 96 போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் பாதிக்கப்படக்கூடும் எனக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 53 போயிங் 737 மேக்ஸ் விமானங்களையும், ஆகாசா ஏர் நிறுவனம் 43 விமானங்களையும் இயக்கி வருகின்றன.

இருப்பினும், இந்த ஆட்டோபைலட் சிக்கலால் விமானப் பயணங்களின் பாதுகாப்பிற்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என்றும், ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களின்படி விமானங்கள் பத்திரமாக இயக்கப்படுவதாகவும் ஆகாசா ஏர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

தீர்வு

மேனுவலாக இயக்கும் வசதி மற்றும் போயிங் நிறுவனத்தின் தீர்வு

ஆட்டோபைலட் செயலிழந்தாலும் விமானிகளால் விமானத்தை மேனுவலாக கட்டுப்படுத்தி பாதுகாப்பாகத் தரையிறக்க முடியும் என்று போயிங் தெரிவித்துள்ளது.

தற்காலிக நடவடிக்கையாக, லேண்டிங் பாதை மாறும்போது அமைப்பை ரீசெட் செய்யுமாறு விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கோளாறை நிரந்தரமாக சரிசெய்யும் வகையில் புதிய மென்பொருள் அப்டேட்டை உருவாக்கும் பணிகளில் போயிங் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் யுனைடெட் மற்றும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் புதிய அப்டேட் வரும் வரை பழைய மென்பொருளையே பயன்படுத்தக் கோரியுள்ளன.

ADVERTISEMENT

பாதுகாப்பு சோதனைகள்

தொடரும் போயிங் விமானங்களின் பாதுகாப்பு சோதனைகள்

ஏற்கனவே 2018 மற்றும் 2019ல் நிகழ்ந்த விபத்துகள் காரணமாக போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் உலகம் முழுவதும் முடக்கப்பட்ட வரலாறு உள்ளது.

மேலும், 2025 ஜூன் மாதம் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விபத்திற்குப் பிறகு, இந்தியாவில் போயிங் விமானங்கள் மீதான பாதுகாப்புத் தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது மீண்டும் 737 மேக்ஸ் விமானங்களில் ஆட்டோபைலட் கோளாறு கண்டறியப்பட்டுள்ளது பயணிகள் மற்றும் விமானத்துறை வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT