திருவண்ணாமலை மண் சரிவில் ஐவர் சடலமாக மீட்பு; மழையிலும் தொடரும் தேடுதல் பணி
புயல் காரணமாக திருவண்ணாமலையில் கடந்த இரண்டு தினங்களாக கடும் மழை பெய்த நிலையில் நேற்று மலையிலிருந்து மண் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததில், 7 பேர் மண்ணுக்கடியில் சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்க பேரிடர் மீட்பு குழுவும் தீயணைப்பு துறையினரும் போராடி வரும் நிலையில் 5 பேரின் உடல் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மீட்பு பணி 12 மணிநேரம் தொடர்ந்து நடைபெற்ற பின்னர் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மண் மற்றும் பாறைகள் சரிந்து இரண்டு வீடுகளை அழித்து விட்டன. இவற்றில் 7 பேர் சிக்கிக் கொண்டனர் - ராஜ்குமார், மீனா தம்பதி; அவர்களின் குழந்தைகள் கவுதம் (8), இனியா (6) மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்கள் மகா (12), வினோதினி (16), ரம்யா(12) ஆகியோர்.
மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தாமதாகும் மீட்பு பணிகள்
ஆரம்பத்தில் மழை மற்றும் வெளிச்சம் இல்லாத சூழ்நிலையினால், மீட்பு பணியில் ஆரம்பத்தில் தாமதங்கள் ஏற்பட்டு இருந்தன. ஆனால், பின்பு தேசிய பேரிடர் குழு மற்றும் துணைக்குழு களத்தில் இறங்கிய பின்னர், மீட்பு பணியில் முன்னேற்றம் காணப்பட்டது. மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுபோன்ற மண்சரிவு சம்பவம் முன்னதாக இதுவரை பதிவானதில்லை என குறிப்பிட்டார். பாறைகள் உருண்டு விழுந்த காரணமாக, இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். இதுவரை 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, மீதமுள்ள 4 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், பாறைகள் உருண்டு விழக்கூடும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில் இருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.