விவாத மேடையில் சரிந்த ஹெச். ராஜா; அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா, சென்னையில் நடைபெற்ற ஊடக விவாத நிகழ்ச்சியின் போது திடீரென மயங்கி விழுந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன், சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விவாத நிகழ்ச்சியில் ஹெச். ராஜா பங்கேற்றார். விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அவர் திடீரென மேடையிலேயே மயங்கிச் சரிந்தார். மேடையில் இருந்தவர்கள் அவரை பிடித்துக் கொண்டனர். அதே நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பாஜக மூத்த தலைவரும் மருத்துவருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்தார். முதலில் சர்க்கரை அளவு குறைந்திருக்கலாம் அல்லது ரத்த அழுத்தம் அதிகரித்திருக்கலாம் என்று கருதப்பட்டது. உடனே அருகிலிருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அறிக்கை
பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை
ஹெச்.ராஜா பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட சோதனையில், பக்கவாத பாதிப்பு (Stroke) ஏற்பட்டுள்ளது என உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) நரம்பியல் நிபுணர்கள் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசக்கூடிய வகையில் நலமுடன் உள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.