"அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சென்ற மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட சலசலப்பு ஓய்வதற்குள், இன்று காலை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தமிழகஅரசு செயலகம் முழுவதும் தீவிர போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெங்களுருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானநிலையம் வந்தடைந்தார்.
அப்போது நிருபர்களை சந்தித்த முதல்வர், "பெங்களூருவில் 2 நாட்கள் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளோம். மத்திய பாஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாஜகவுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது," எனக்கூறினார்.
card 2
"அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கவலைப்படவில்லை"
தொடர்ந்து பேசிய முதல்வர், " அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கவலைப்படவில்லை. பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தை திசை திருப்பும் பாஜகவின் தந்திரமே இந்த சோதனை.எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை முடக்கவே அமலாக்கத்துறையை வைத்து சோதனை" எனக்கூறினார்.
மேலும், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் புனையப்பட்ட பொய் வழக்கில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்" என பதிலளித்தார்.
"ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறையினர், திமுகவின் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக அரசால் அமலாக்கத்துறை ஏவப்பட்டுள்ளது. தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்று தான் நான் கருதுகிறேன்" என்றார்.