இன்று இந்தியா முழுவதும் 'பாரத் பந்த்': ஸ்தம்பிக்கிறதா போக்குவரத்து? வங்கிகள், பள்ளிகள் நிலை என்ன?
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று, பிப்ரவரி 12, நாடு தழுவிய அளவில் 'பாரத் பந்த்' நடைபெறுகிறது. 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் 'சமயுக்த கிசான் மோர்ச்சா' (SKM) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. எனினும் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், மருந்தகங்கள் மற்றும் பால் விநியோகம் போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்குப் பந்த்-திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
காரணங்கள்
பந்த்-திற்கான முக்கிய காரணங்கள்
விவசாயிகள் எதிர்ப்பு: அமெரிக்காவின் மலிவான பால் பொருட்கள் மற்றும் விவசாயத் தயாரிப்புகள் இந்திய சந்தையில் குவிந்தால், உள்நாட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என SKM அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். தொழிலாளர் சட்டங்கள்: பழைய 29 தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்டுள்ள 4 புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. வர்த்தக ஒப்பந்தம்: இந்திய அரசு அமெரிக்காவிடம் 'சரணடைந்துவிட்டது' என்று போராட்டக் குழுவினர் விமர்சித்துள்ளனர்.
பாதிப்பு
என்னென்ன சேவைகள் பாதிக்கப்படும்?
வங்கிகள்: பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்பதால், காசோலை பரிவர்த்தனை மற்றும் நேரடி வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம். இருப்பினும், ATM மற்றும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் வழக்கம் போலச் செயல்படும். போக்குவரத்து: கேரளா, கர்நாடகா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசுப் பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படலாம். கல்வி நிறுவனங்கள்: நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை என எந்த பொதுவான அறிவிப்பும் இல்லை. இருப்பினும், போராட்டத்தின் தீவிரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்படலாம். கடைகள்: உள்ளூர் வர்த்தக சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கும் இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.