'ஆண்டி' என்று அழைத்ததற்காக ஏடிஎம் காவலாளியை செருப்பால் அடித்த பெங்களூரு பெண்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தன்னை "ஆண்டி" என்று அழைத்ததற்காக ஏடிஎம் காவலாளி ஒருவரை, ஒரு பெண் தாக்கி இருக்கும் சம்பவம் வைரலாக பரவி வருகிறது. பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள ஏடிஎம்மில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பதற்காக, ஏடிஎம் கேபின் கதவருகே நின்று கொண்டிருந்திருக்கிறார். அந்த சமயத்தில், அங்கு வந்த ஏடிஎம் காவலாளி, வாடிக்கையாளர்களுக்கு வழி விட சொல்லி அந்த பெண்ணிடம் பேசி இருக்கிறார். அப்போது அவர் அந்த பெண்ணை "ஆண்டி" என்று அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த பெண், ஏடிஎம் காவலாளியை செருப்பால் அடித்து தாக்கினார்.
ஏடிஎம் காவலாளிக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை
இந்த சம்பவம் நடக்கும் போது அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தின் போது அந்தப் பெண்ணுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என்றும் சிலர் கூறியுள்ளனர். எனினும், இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின், உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், ஏடிஎம் காவலாளிக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.