LOADING...
பெங்களூருவில் நேற்று ஆலங்கட்டி மழை; திடீரென பெய்ய என்ன காரணம்?
பெங்களூருவில் நேற்று பெய்த ஆலங்கட்டி மழை

பெங்களூருவில் நேற்று ஆலங்கட்டி மழை; திடீரென பெய்ய என்ன காரணம்?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 30, 2026
04:29 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நேற்று இரவு பெய்த கனமழை, ஏப்ரல் மாதத்தில் பெய்த அதிகப்படியான மழை என்ற 15 ஆண்டு கால வரலாற்றை முறியடித்துள்ளது. 2026, ஏப்ரல் 30-ஆம் தேதி காலை 8:30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மட்டும் 111 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக 2001-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி பதிவான 108.6 மி.மீ மழையே சாதனையாக இருந்தது. திடீரெனப் பெய்த இந்த ஆலங்கட்டி மழையுடன் கூடிய இடியுடன் கூடிய கனமழை, பெங்களூரு நகரத்தை நிலைகுலையச் செய்துள்ளது கனமழை காரணமாக மருத்துவமனை ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

காரணம்

இந்த திடீர் வானிலை மாற்றத்திற்கு என்ன காரணம்?

வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் வறண்டு காணப்படும் பெங்களூருவில் இவ்வளவு தீவிரமான மழை பெய்ய 'வெப்பச் சலனம்' முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக வெப்பக் காற்று வேகமாக மேலே உயர்ந்து, ஈரப்பதமான காற்றுடன் கலந்ததால் மேகங்கள் மிக உயரமாக வளர்ந்து (Tall clouds) இடியுடன் கூடிய மழையை உருவாக்கின. மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றினால் நகரின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பெங்களூருவில் இன்றும் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை தொடரலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement