உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுத்தது மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளத்தின் சந்தேஷ்காலியில் மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் திரிணாமுல் பிரமுகர் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசு மறுத்துவிட்டது. சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு சிஐடிக்கு செவ்வாய்க்கிழமை கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அவரை ஒப்படைக்க வங்காள அரசு மறுத்துள்ளது. ஷாஜகானின் காவலையும், ஆதாரங்களையும் நேற்று மாலை 4.30 மணிக்குள் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இரவு 7.30 மணி வரை சிபிஐ குழுவிடம் குற்றவாளி ஒப்படைக்கப்படாததால் கொல்கத்தாவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் இருந்து அதற்கு பின் சிபிஐ குழு வெளியேறியது.
மேற்கு வங்காள அரசு பாரபட்சத்துடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு
மேற்கு வங்காள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியதால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை ஷேக் ஷாஜகானை விடுவிக்க முடியாது என்று மாநில அரசாங்கம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு குறித்து முன்பு விசாரித்த கல்கத்தா உயர் நீதிமன்றம் மேற்கு வங்காள அரசு பாரபட்சத்துடன் செயல்படுவதாக தெரிவித்தது. மேலும், ஷாஜகானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை "நியாயமான, நேர்மையான மற்றும் முழுமையான விசாரணைக்கு" உட்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அழைப்பு விடுத்தது. "சிபிஐக்கு மாற்ற இதை விட சிறந்த வழக்கு வேறு எதுவும் இருக்க முடியாது ... இது சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்" என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.