LOADING...
மூன்று பேரும் குற்றவாளிகள்தான்; பவாரியா கும்பல் வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
பவாரியா கும்பல் வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

மூன்று பேரும் குற்றவாளிகள்தான்; பவாரியா கும்பல் வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2025
06:29 pm

செய்தி முன்னோட்டம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் தொடர்புடைய பவாரியா கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் குற்றவாளிகள் எனச் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) தீர்ப்பளித்துள்ளது. 1995 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில், பவாரியா கொள்ளைக் கும்பல் தமிழகத்தில் பெரும் அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது. சுதர்சனம் உட்பட மொத்தம் 13 பேர் இந்தக் கும்பலால் கொலை செய்யப்பட்டு கொள்ளைச் சம்பவங்கள் நடத்தப்பட்டன. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், ஐ.ஜி. ஜாங்கிட் தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து தனிப்படைப் போலீசார், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் முகாமிட்டு, இந்தக் கும்பலின் 13 பேரைக் கைது செய்தனர். இதில் உத்தரப் பிரதேசத்தில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தண்டனை

முந்தைய தீர்ப்புகள்

கைது செய்யப்பட்ட 13 பேரில் நால்வருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அதை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. ஆயுள் தண்டனை பெற்ற நால்வரில் கொள்ளைக் கும்பலின் தலைவன் ஓமா உட்பட இருவர் சிறையிலேயே உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள மூவர் தற்போது தண்டனையை அனுபவித்து வருகின்றனர். மற்ற ஒன்பது பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்நிலையில், சுதர்சனம் கொலை வழக்கில் கைதான ஜெகதீஷ், ராகேஷ், மற்றும் அசோக் ஆகியோரை நீதிமன்றம் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. மற்றொரு குற்றவாளியான ஜெயில்தார் சிங் குறித்த உத்தரவு வரும் நவம்பர் 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், தண்டனை விபரங்களும் நவம்பர் 24 அன்று வெளியாக உள்ளது.