2027-ம் ஆண்டு முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பரிந்துரைக்கும் மத்திய அமைச்சகம்!
2027-ம் ஆண்டு முதல் 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட மற்றும் அதிகம் மாசடைந்த நகரங்களில் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் எண்ணெய் வளத்துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எண்ணெய் வளத்துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் தலைமையிலான குழு இதுகுறித்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது. 2035-ம் ஆண்டிற்குள் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் இருசக்கர வாகனப் பயன்பாட்டை படிப்படியாகக் குறைக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், 2024-ம் ஆண்டு முதல் நகரப்புரங்களில் புதிய டீசல் பேருந்துகளை வாங்கக்கூடாது எனவும், 2030-ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் பேருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று எரிபொருள் வாகனப் பயன்பாடு:
முழுமையாக எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு மாறுவதற்கு இடைப்பட்ட அடுத்த 10 முதல் 15 வருடங்களுக்கு எத்தானால் எரிபொருளில் இயங்கும் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் FAME திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே புதிய பதிவுகளை வழங்கவேண்டும் எனவும், ரயில் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்கள் மூலம் சரக்குகளை கையாளுவதை ஊக்குவிக்கவும் பரிந்துரை செய்திருக்கிறது. 2070-ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்யம் கார்பன் உமிழ்வை சாத்தியப்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது இந்தியா. அந்த நோக்கத்தை சாத்தியப்படுத்தவே மேற்கூறிய பரிந்துரைகளும் செய்யப்பட்டிருக்கின்றன.