Loading...
அயோத்தி ராமர் கோவில் உண்டியல் பணம் கொள்ளை எப்படி அம்பலமானது தெரியுமா? சிக்கிய முக்கிய ஆதாரங்கள்
இந்த மோசடி தொடர்பாக பணம் எண்ணும் பணியில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அயோத்தி ராமர் கோவில் உண்டியல் பணம் கொள்ளை எப்படி அம்பலமானது தெரியுமா? சிக்கிய முக்கிய ஆதாரங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 17, 2026
05:47 pm

செய்தி முன்னோட்டம்

அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் உள்ள கழிவறை ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறிய பணக்கட்டு, தற்போது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ள மிகப்பாரிய உண்டியல் காணிக்கை திருட்டு ஊழலாக உருவெடுத்துள்ளது. ஒரு துப்புரவு பணியாளர் அல்லது பாதுகாப்பு காவலர் தற்செயலாக கண்டெடுத்த 40,000 ரூபாய் பணம்தான், கடந்த பல மாதங்களாக பக்தர்களின் காணிக்கை பணத்தை திட்டமிட்டு சூறையாடி வந்த ஒரு பெரிய நெட்வொர்க்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

துப்பு

கழிவறையில் தொடங்கிய க்ளூ

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திக் குறிப்பின்படி, ராமர் கோவில் வளாகத்தின் கழிவறையில் ரூ.40,000 மறைத்து வைக்கப்பட்டிருந்ததை ஒரு காவலாளி கவனித்து அறக்கட்டளை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தால் எழுந்த சந்தேகத்தின் பேரில், காணிக்கை எண்ணும் அறையின் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அங்கு அவர்களுக்குக் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.

பணம் எண்ணும் குழுவைச் சேர்ந்த சிலர், சிசிடிவி கேமராக்களின் கோணங்களை மறைத்துக் கொண்டும், தங்களின் ஆடைகளுக்குள் பணக் கட்டுகளை மறைத்துப் பதுக்குவதும் கேமராவில் அப்பட்டமாக தெரியவந்தது.

பதுக்கல்

நூதன முறையில் கடத்தப்பட்ட கோடிகள்

கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மிகவும் திட்டமிட்ட ஒரு 'Modus Operandi' மூலமாக பணத்தை கடத்தியுள்ளனர்.

முதற்கட்டமாக, பணம் எண்ணும் போது திருடப்படும் நோட்டுகள் அனைத்தையும் கோவில் வளாகத்தில் உள்ள கழிவறைகளுக்குள் ரகசியமாக பதுக்கி வைத்துள்ளனர்.

பாதுகாப்புப் பணியாளர்கள் அல்லது சக ஊழியர்களின் கண்ணில் படாமல் இருக்க, அந்த பணத்தை ஒரே நேரத்தில் கொண்டு செல்லாமல், சிறு சிறு பகுதிகளாக நாளுக்கு நாள் வெளியில் கடத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

விசாரணை

தீவிரமடையும் SIT விசாரணை; சிக்கிய சொகுசு வாகனங்கள்

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுவரை இந்த மோசடி தொடர்பாக பணம் எண்ணும் பணியில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளிடமிருந்து சுமார் 80 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், லட்சக்கணக்கான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், மற்றும் திருட்டுப் பணத்தில் வாங்கப்பட்ட ஆடம்பர கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவர்களின் உறவினர்களின் 50-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை முடக்கி காவல்துறையினர் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

முறையான ஆவணப் பதிவுகள் இல்லாததாலும், தினசரி வரும் கோடிக்கணக்கான காணிக்கை வரவாலும் துல்லியமாக எவ்வளவு தொகை திருடப்பட்டது என்பதை அறிய முடியாத சூழல் நிலவுகிறது.

ADVERTISEMENT

முதற்கட்ட அறிக்கை

SIT-யின் முதற்கட்ட அறிக்கை

அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளின் பரிந்துரையின் பேரில் பணியமர்த்தப்பட்ட நபர்களே இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளதும், பணம் எண்ணும் அறைக்குள் ஊழியர்களை முறையாக சோதனை செய்யாததும், உண்டியல் சாவிகளை பெற அவர்களுக்கு இருந்த அத்துமீறிய அனுமதியுமே இந்தத் திருட்டுக்கு முக்கியக் காரணம் என SIT யின் முதற்கட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனையடுத்து, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தங்களின் பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமையாக மாற்றியமைத்துள்ளது.

மனித தலையீடுகளை குறைத்து, பயோமெட்ரிக் வருகை மற்றும் அதிநவீன கண்காணிப்பு கருவிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் மற்றும் பாதுகாப்பான காணிக்கை சேகரிப்பு முறையை அறக்கட்டளை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT