அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் அமைச்சர்களாக இன்று(மார் 9) பதவியேற்றனர். சௌரப் பரத்வாஜுக்கு சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, நீர் மற்றும் தொழில் துறைகள் வழங்கப்பட்டுள்ளது. கல்வி, பொதுப்பணித்துறை, மின்சாரம் மற்றும் சுற்றுலா துறைகளுக்கு அமைச்சராக அதிஷி பொறுப்பேற்றார். டெல்லி அமைச்சராக சவுரப் பரத்வாஜ் பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். 2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசில் போக்குவரத்து அமைச்சராக இவர் பணியாற்றி இருக்கிறார். அதே வேளையில், மனிஷ் சிசோடியாவின் கீழ் கல்வித் துறை ஆலோசகராக அதிஷி இதற்கு முன் பணியாற்றியுள்ளார்.
மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ராஜினாமா
ஆம் ஆத்மி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ராஜினாமா செய்ததை அடுத்து இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள் தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மார்ச் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து திகார் சிறை எண்-1க்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். ஆம் ஆத்மி கட்சி(AAP) தலைமையிலான டெல்லி அரசாங்கத்தின் ரத்து செய்யப்பட்ட 2021-22 டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.