ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் நிலையில், இந்தியாவின் அதிவேக ரயிலான 'வந்தே பாரத்' ரயிலினை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்னும் பெருமையினை சுரேகா யாதவ் என்பவர் பெற்றுள்ளார். மத்திய பிரதேசத்தின் சோலாலம்பூர் என்னும் ரயில் நிலையத்தில் இருந்து மும்பையின் சத்திரபதி சிவாஜி மகாராஜா முனையம் வரை வந்தே பாரத் ரயிலை சுரேகா யாதவ் இயக்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநில சதாராவில் வசித்து வரும் திருமதி சுரேகா யாதவ் 1989ல் இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநராக பணியில் சேர்ந்தார்.
கடினமான பயிற்சிகளை மேற்கொண்ட பின்னரே வந்தே பாரத் ரயிலினை இயக்கினார் சுரேகா யாதவ்
அதன் பின்னர் இவர் படிப்படியாக உயர்ந்து பல சாதனைகளை புரிந்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை. கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் ரயில் ஓட்டுநராக பணிபுரிந்து அனுபவம் மிக்க இவர் தற்போது அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலினை இயக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். இந்த பணிக்காக அவர் பல கடினமான பயிற்சிகளுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். மிக வேகமாக வரும் இந்த ரயிலில் இருந்து கொண்டு ரயில் சமிக்ஞைகளை கவனித்தல், புதிய அதிநவீன கருவிகளை இயக்குதல் என அனைத்து பயிற்சிகளையும் முடித்த பின்னரே அவர் வந்தே பாரத் ரயிலினை இயக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் சுரேகாவின் புகைப்படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.