தீவிரமடைந்தது 'மிக்ஜம்' புயல்: 12 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜம்' புயல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று மிதமான இடி, மின்னல் மற்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, தேனி மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வேளாங்கண்ணி கடற்கரையில் 100 மீட்டர் பின்வாங்கிய கடல்
வங்கக்கடலில் உருவாகி வரும் 'மிக்ஜம்' புயல் காரணமாக, டிசம்பர் 3-ஆம் தேதி முதல், வட தமிழகக் கடற்கரை மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் மழை மற்றும் காற்றின் தீவிரம் அதிகரிக்கும். மேலும், அந்த புயல் டிசம்பர் 4ஆம் தேதி மாலை தமிழகம் மற்றும் ஆந்திராவில் கரையை கடக்கும். இதனிடையே, தமிழகம் முழுவதும் புயல் தாக்கும் அபாயம் நிலவி வரும் நிலையில், கடலோரப் பகுதிகளில் கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில், கடல் 100 மீட்டர் பின்வாங்கியுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகம் உட்பட ஐந்து துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை அதிகாரிகள் ஏற்றியுள்ளனர்.