பகவத் கீதா, வீட்டில் சமைத்த உணவு மற்றும் பெல்ட் ஆகியவற்றை கோரும் அரவிந்த் கெஜ்ரிவால்
சிபிஐ காவலில் இருக்கும்போது, அரவிந்த் கெஜ்ரிவால் தனது கண்ணாடிகளை பயன்படுத்தவும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ளவும், வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவும், பகவத் கீதையின் நகலை வைத்திருக்கவும், தினமும் ஒரு மணி நேரம் தனது மனைவி மற்றும் உறவினர்களை சந்திக்கவும் அனுமதிக்கப்படுவார். முன்னதாக மதுபானக் கொள்கை வழக்கில் நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 3 நாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். எனினும் இந்த ரீமாண்ட் காலத்தில் சில சலுகைகள் வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டது நீதிமன்றம். அவற்றுள் மேற்கூறிய கோரிக்கைகளுடன், மற்றொரு கோரிக்கையும் வைக்கப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை
நீதிபதி முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் மற்றொரு கோரிக்கையையும் வைத்தார். அதில், அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்த வழக்கில் தான் சிறைக்கு அனுப்பப்பட்டபோது, தனக்குத் தேவையான பொருட்களின் பட்டியலில் தனது பெல்ட்டை குறிப்பிட மறந்துவிட்டதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். கெஜ்ரிவால் தனது பெல்ட்டை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதால், திகார் சிறைக்குச் செல்லும் போது தனது பேண்ட்டைப் கைகளால் பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது எனவும், இது தனக்கு "அவமானமாக" இருந்தது என்றும் விளக்கினார். கெஜ்ரிவாலின் இந்த தனிப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன் பின்னர் 3 நாட்கள் சிபிஐ காவலில் எடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 29ம் தேதி இரவு 7 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.