Page Loader
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு
411 பிரத்தியேக POCSO நீதிமன்றங்கள் உட்பட 764 சிறப்பு நீதிமன்றங்கள் நாடுமுழுவதும் இயங்கிவருகின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு

எழுதியவர் Sindhuja SM
Mar 16, 2023
07:12 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 5 ஆண்டுகளில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுமார் 1 கோடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விவரங்களை நாடாளுமன்றத்தில் கேட்ட தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) தலைவர் ஃபவுசியா கான், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, "பலாத்கார வழக்குகளின் விசாரணையை 2 மாதங்களில் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விசாரணைகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் குற்றவியல் சட்டம் (திருத்தம்), 2018 கூறுகிறது(சட்டபிரிவு 173 CrPC)." என்று பதிலளித்துள்ளார்.

இந்தியா

மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அளித்த விளக்கம்

உள்துறை அமைச்சகம்(MHA), நாடு முழுவதும் உள்ள பாலியல் குற்றவாளிகளை விசாரிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் வசதியாக 20 செப்டம்பர், 2018இல் "பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை"(NDSO) தொடங்கியது. குற்றவியல் சட்டம் (திருத்தம்), 2018 இன் படி, பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை கண்காணிக்க "பாலியல் குற்றங்களுக்கான விசாரணை கண்காணிப்பு அமைப்பு" என்ற ஆன்லைன் பகுப்பாய்வுக் கருவியை MHA அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில தடய அறிவியல் ஆய்வகங்களில்(FSL) டிஎன்ஏ பகுப்பாய்வு அலகுகளை வலுப்படுத்த MHA நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் அதிநவீன டிஎன்ஏ பகுப்பாய்வு பிரிவை அமைத்ததும் அடங்கும். ஜனவரி 31, 2023 நிலவரப்படி, 411 பிரத்தியேக POCSO நீதிமன்றங்கள் உட்பட 764 சிறப்பு நீதிமன்றங்கள் நாடுமுழுவதும் இயங்கிவருகின்றன.