இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கும் ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனமானது தங்களது உளகளாவிய ஐபோன் தயாரிப்பில் 18%-த்தை 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கு மாற்றலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பிற்கு மத்திய அரசால் ஊக்கத்தொகை (PLI Scheme) வழங்கப்பட்டு வருகிறது. சீனாவைத் தவிர்த்து தங்களது ஐபோன் தயாரிப்பைப் பரவலாக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் ஆப்பிளுக்கு இந்தியா சிறந்த இடமாக இருக்கிறது. 2021-ல் இந்தியாவில் 1%-ஆக இருந்த ஐபோன் தயாரிப்பை, 2023-ல் 7%-ஆக உயர்த்தியிருக்கிறது ஆப்பிள். உளகளவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களில் 25%-தத்தை இந்தியாவியே உற்பத்தி செய்ய வேண்டும் என ஆப்பிள் விரும்புவதாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 18% சதவிகிதம் தயாரிப்பை அந்நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பேங்க் ஆஃப் அமெரிக்காவின் அறிக்கை:
இந்தியாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த அறிக்கை ஒன்றை பேங்க் ஆஃப் அமெரிக்கா வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், இந்தியாவின் மொத்த எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான தேவையில் 21.5%-தத்தை ஸ்மார்ட்போன்களே பிடித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் 158 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய எலெக்ட்ரானிக் பொருட்கள் இந்தியாவில் நுகரப்பட்டிருக்கிறது. அதில் 77 பில்லியன் டால்கள் மதிப்புடைய எலெக்ட்ரானிக் சாதனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க மத்திய அரசு அறிமுகப்படுத்திய PLI திட்டத்தின் மூலமாக இந்தியாவின் எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி 16%-தத்தில் இருந்து 25% ஆக வளர்ச்சி அடைந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.