இந்தியாவில் ரூ.10,000 கோடியாக உயர்ந்த ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி
கடந்த மே மாதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டும் ஆப்பிள் ஐபோன்களின் மதிப்பு ரூ.10,000 கோடியாக அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஏப்ரம் மற்றும் மே மாதங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து ரூ.20,000 கோடி மதிப்புடைய ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு கூட்டமைப்பின் தகவல்படி, இது கடந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களை விட இரண்டு மடங்கும் அதிகமாகும். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தங்களது உற்பத்தி அளவை உயர்த்தி வருவதையடுத்து, கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்களின் மதிப்பு நான்கு மடங்கு வரை 5 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது.
இந்தியாவில் கவனம் செலுத்தும் ஆப்பிள்:
இதற்கு முன்பு வரை உலகளவில் பெரும்பாலான தங்களது தயாரிப்புகளை சீனாவிலேயே உற்பத்தி செய்து வந்தது ஆப்பிள் நிறுவனம். சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிச்சயமற்றி சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இந்தியாவிலும் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கு PLI திட்டம் அமலில் இருப்பதையடுத்து இந்தியாவில் தங்கள் தயாரிப்புகளின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்தது ஆப்பிள். அதன் பொருட்டு இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியாளர்கள் தங்களது புதிய தொழிற்சாலையை கட்டமைப்பது மற்றும் ஆப்பிள் தயாரிப்புகளின் உற்பத்திய உயர்த்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். உலகளாவிய ஆப்பிள் தயாரிப்புகளின் உற்பத்தியில் 5-7% இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இதனை வரும் 2025-ம் ஆண்டுக்குள் 25%-ஆக உயர்த்த ஆப்பிள் நிறுவனம் விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.