
ஆபரேஷன் காவேரி: மேலும் 186 பேர் சூடானில் இருந்து மீட்பு
செய்தி முன்னோட்டம்
போர்க்களமாக மாறியுள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற ஒரு வாரத்திற்கு முன்பு 'ஆபரேஷன் காவேரி' என்ற நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம், 186 பேர் கொண்ட மற்றொரு குழுவை இந்தியா நேற்று மீட்டது.
"ஆபரேஷன் காவேரி தொடர்ந்து இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறது.186 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் கொச்சியை அடைந்தது" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, 229 இந்தியர்கள் பெங்களூரை வந்தடைந்தனர். அதற்கு முந்தைய நாள், 365 பேர் டெல்லிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.
details
இதுவரை 2,140 இந்தியர்கள் வீடு திரும்பியுள்ளனர்
வெள்ளிக்கிழமை அன்று 754 பேர் இரண்டு வெவ்வேறு விமானங்களில் இந்தியா வந்தடைந்தனர்.
சூடானில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 2,140 ஆக உள்ளது.
சவூதி அரேபிய நகரமான ஜெட்டாவில் இருந்து இந்தியர்கள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். சூடானில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தற்காலிமாக ஜெட்டாவில் ஒரு முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 பேர் கொண்ட முதல் குழு, கடந்த புதன்கிழமை அன்று டெல்லிக்கு திரும்பியது.
246 பேர் கொண்ட இரண்டாவது குழு இந்திய விமானப்படையின் C17 குளோப்மாஸ்டர் விமானத்தில் வியாழக்கிழமை மும்பைக்கு வந்தடைந்தது.
சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ படைகளுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டு மோதல்களால், அந்நாட்டின் பாதுகாப்பு நிலை மோசமடைந்துள்ளது.