தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் என்னும் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலிருந்த வரதராஜ பெருமாள் சிலை, ஸ்ரீ தேவி சிலை, பூதேவி சிலை மற்றும் ஒரு ஆஞ்சநேயர் சிலை உள்ளிட்ட உலோக சிலைகள் கடந்த 2012ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இது குறித்து அக்கோயில் நிர்வாகிகள் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையினை மேற்கொண்டுள்ளார்கள். அதன் பின்னர் கடந்த 2020ம் ஆண்டு இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வெளிநாடுகளில் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளோடு இந்த 4 சிலையினை ஒப்பீடு செய்து பார்த்து வந்துள்ளார்கள்.
அமெரிக்க தூதரகத்திற்கு வேண்டுகோள் கடிதம்
இந்நிலையில் ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததும், அந்த சிலையினை அமெரிக்க குடியுரிமை பெற்ற ஆஸ்திரேலிய நபர் ஒருவர் ஏலத்தில் பெற்று சென்றதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொல்லியல் துறை அதிகாரிகள் உதவியோடு களவாடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், அமெரிக்காவில் ஏலம் விடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையினையும் ஒப்பீடு செய்து பார்த்துள்ளார்கள். அதில் இரண்டும் ஒரே சிலை என்பது தெரியவந்துள்ளது. இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமெரிக்க தூதரகத்திற்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றினை அளித்துள்ளது. அதன்படி சிலையை ஏலத்தில் எடுத்த ஆஸ்திரேலிய நபர் அதனை அமெரிக்க தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளார். பல சோதனைகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து இச்சிலை தொல்லியல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.