முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி தற்போதைய திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அவரது முன்ஜாமீன் மனுத் தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட அவர், தற்பொழுது பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
பொதுக்கூட்டத்தில் சர்ச்சை பேச்சு
ஆத்தூர் பொதுக்கூட்ட பேச்சும் தவெக புகாரும்
கடந்த ஜூன் 20 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்தும், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் மிகவும் அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆத்தூர் நகர செயலாளர் எஸ்.செல்வம் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் போலிசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
கைது நடவடிக்கை
உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததால் பாய்ந்த கைது நடவடிக்கை
கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர முன்ஜாமீன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஜூலை 3 ஆம் தேதி (இன்று) காலை நீதிமன்றத்திற்கு வந்த போது, வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே, ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலிசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
திமுக போராட்டம்
எஸ்பி அலுவலகத்தில் விசாரணை மற்றும் திமுகவினர் போராட்டம்
கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் உடனடியாகத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அங்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையிலான போலிஸ் அதிகாரிகள் அவரிடம் இந்த அவதூறு வழக்கு குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தங்களது மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் எஸ்பி அலுவலகத்தின் முன்பு திரண்டு போலிசாரைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆத்தூர் பகுதியிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அந்தப் பகுதியில் தற்பொழுது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.