அந்தமான் நிக்கோபாரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆகப் பதிவு
செய்தி முன்னோட்டம்
அந்தமான் கடலில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) நண்பகல் வேளையில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் தேசிய நில அதிர்வு மையம் (NCS) அறிவித்துள்ளது. இந்த நில அதிர்வு சரியாகப் பிற்பகல் 12:06 மணிக்கு 90 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இதுவரை எந்தவிதமான உயிர்ச் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் அதிக நிலநடுக்க ஆபத்து நிறைந்த மண்டலமான V-இல் அமைந்துள்ளன. இந்திய-ஆஸ்திரேலியன் தட்டு மற்றும் பர்மா தட்டு ஆகியவற்றின் குவிதல் எல்லையில் (Convergent Boundary) அமைந்துள்ளதன் காரணமாக, இந்த பிராந்தியத்தில் மிதமான மற்றும் வலுவான நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம்.
நிலநடுக்கம்
அதிக ஆபத்துள்ள மண்டலம்
உதாரணமாக, 1941 இல் ஏற்பட்ட 7.7-8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், இந்தப் பகுதியின் அபாயகரமான தன்மையை உணர்த்துகிறது. பூமியின் மேலோட்டில் உள்ள டெக்டோனிக் தகடுகளின் மெதுவான அசைவுகளால் ஏற்படும் அழுத்தத்தால் பிளவுகள் ஏற்பட்டு, அந்த அழுத்தம் பாறைகளின் வலிமையை மீறும் போது, அவை உடைந்து அல்லது சரிந்து, ஆற்றலை நில அதிர்வு அலைகளாக வெளியிடும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. ரிக்டர் அளவுகோல் என்பது இந்த வெளியிடப்பட்ட ஆற்றலின் அளவை அளவிடுகிறது. இந்தியாவின் நில அதிர்வு ஆபத்தை பொறுத்து மண்டலம் II (மிகக் குறைந்த ஆபத்து) முதல் மண்டலம் V (மிக அதிக ஆபத்து) என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.