அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - பாதிக்கப்பட்ட பெண் பகீர் வாக்குமூலம்
விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது. இங்கு தங்கவைக்கப்பட்டிருந்தோர் பல கொடுமைகளையும், பாலியல் வன்முறைகளையும் மேற்கொண்டதாக புகார்கள் எழுந்த நிலையில், போலீசார் சம்பந்தப்பட்ட 6 பேரினை கைது செய்து 13 பிரிவுகளில் வழக்குகள் போடப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்த விசாரணை தற்போது சிபிசிஐடி போலீசாரால் 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 20 பேர்களால் கையாளப்படுகிறது. இந்நிலையில் அந்த ஆசிரமத்தில் 4 ஆண்டுகள் தங்கியிருந்த பெண்மணி ஒருவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், கொடுமை தாங்காமல் ஏற்கனவே 2 முறை அங்கிருந்து தப்பியதாகவும், அங்குள்ள வயதானவர்களிடம் இருந்து பணம் நகைகளை வாங்கிக்கொண்டு கொடுமை செய்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
காணாமல் போனவர் உடல் பெங்களூரில் புதைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை
தொடர்ந்து, தன்னிடமே 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி அழுதார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சங்கிலியால் கட்டி வைத்து அடிப்பது மட்டுமின்றி கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்ற பல கொடுமைகள் இங்கு நடக்கும் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து ஆசிரமத்தில் தங்க வைத்திருந்த தனது மாமாவை காணவில்லை என்று கூறி ஆட்கொணர்வு மனுவினை சலீம்கான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இது குறித்து சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், காணாமல் போன சபீருல்லாவின் உடல் பெங்களூரில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை நேரில் சென்று அடையாளம் காட்டுவது குறித்து சலீம்கான் விளக்கமளிக்க 2 வார கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.