தொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி
தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி மாவட்டத்தின் கெலவல்லி அருகில் உயரழுத்த மின் பாதையினை தொட்ட ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு வனச்சரகம் பிக்கிலி கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக விளை நிலங்களில் ஆண் யானை ஒன்று நடமாடி கொண்டு சேதப்படுத்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவ்வாறு திரியும் அந்த யானையினை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்க வனத்துறை அதிகாரிகள் பல முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையே நேற்று(மார்ச்.,17) பாப்பாரப்பட்டி, காரிமங்கலம் பகுதி வழியே இந்த ஆண் யானையானது கம்பைநல்லூர் பகுதிக்கு சென்றுள்ளது.
சட்டவிரோதமாக மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி
அதன்படி அந்த ஆண் யானையினை பின்பற்றியவாறு வனத்துறையினரும் சென்றுள்ளார்கள். இந்நிலையில் இன்று(மார்ச்.,18) கம்பைநல்லூர் அடுத்த கெலவல்லி அருகே வி.பள்ளிப்பட்ட பகுதியில் உள்ள ஏரிக்கரையில் ஏறுவதற்கு இந்த யானை முயற்சி செய்துள்ளது. அப்போது எதிர்பாரா விதமாக இந்த யானை அப்பகுதியில் சென்ற உயரழுத்த மின்பாதையில் மோதியுள்ளது. இதனால் யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்த நிலையில், சம்பவ இடத்திலேயே அந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதே போல் கடந்த வாரத்திலும் பாலக்காடு அடுத்த மாரண்ட அள்ளி பகுதியில் உள்ள விளை நிலையத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.