Loading...
பொது சிவில் சட்டம் (UCC) 2029-க்குள் 21 மாநிலங்களில் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு
21 மாநிலங்களில் UCC அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

பொது சிவில் சட்டம் (UCC) 2029-க்குள் 21 மாநிலங்களில் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 14, 2026
10:04 am

செய்தி முன்னோட்டம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் 2029 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால மக்கள் சேவையை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை நாடு முழுவதும் நடைபெறவுள்ள 'சேவா சங்கல்ப் அபியான்' பிரச்சாரக் கூட்டம் மற்றும் மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

தற்போதைய நிலை

மாநிலங்களின் தற்போதைய நிலை

பொது சிவில் சட்டத்தை மாநிலங்கள் வாரியாக அமல்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் பிப்ரவரி 2024-இல் சட்டத்தைக் கொண்டுவந்து ஜனவரி 2025 முதல் நடைமுறைப்படுத்தியது.

குஜராத், அஸ்ஸாம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.

மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்டத்திற்கான வரைவை உருவாக்க உயர்நிலைக் குழுக்களை அமைத்துள்ளன.

உள்நாட்டுப் பாதுகாப்பு

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு

ராமர் கோவில் மற்றும் சட்டப்பிரிவு 370 நீக்கம் போல, பொது சிவில் சட்டமும் பாஜகவின் முதன்மையான இலக்குகளில் ஒன்றாகும் என அமித் ஷா சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதும் NRC-ஐ அமல்படுத்துவது குறித்துக் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், இந்தியாவில் உள்ள சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

"துப்பாக்கிச் சூடோ அல்லது உயிரிழப்போ இன்றி சட்டப்பிரிவு 370 வெற்றிகரமாக நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் ஒருங்கிணைக்கப்பட்டது. மேலும், கடந்த பல ஆண்டுகளாக இருந்த நக்சலிசம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, வடகிழக்கு மாநிலங்களில் 14 அமைதி ஒப்பந்தங்கள் மூலம் 9,000-க்கும் மேற்பட்டோர் சரணடைந்துள்ளனர்" என்றும் கூறினார்.

ADVERTISEMENT

மறுசீரமைப்பு

வரலாற்று மறுசீரமைப்பு

முன்னதாக மும்பையில் உள்ள ஆசியடிக் சொசைட்டிக்குச் சென்ற அமித் ஷா, அங்குள்ள பாரம்பரியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்திய வரலாற்று மற்றும் அறிவு அமைப்புகளைக் காலனித்துவ சிந்தனைகளில் இருந்து விடுவிப்பது என்பது வரலாற்றை அழிப்பதல்ல, மாறாக இந்தியக் கோணத்தில் வரலாற்றை முழுமையாகவும் உண்மையாகவும் வெளிக்கொணர்வதே ஆகும் என அவர் விளக்கமளித்தார்.

ADVERTISEMENT