Page Loader
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து

எழுதியவர் Sindhuja SM
Jan 30, 2024
06:08 pm

செய்தி முன்னோட்டம்

நாளை தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் திரும்பப் பெறப்பட்டது. டிசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது இடைநீக்கம் செய்யப்பட்ட 146 சட்டமன்ற உறுப்பினர்களில் இந்த 11 ராஜ்யசபா எம்பிக்களும் அடங்குவர். நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த 146 பேரில், 132 எம்.பி.க்கள் குளிர்கால கூட்ட தொடரில் இருந்து மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களது இடைநீக்கம் கடந்த மாதம் குளிர்கால கூட்ட தொடர் முடிவடைந்ததும் நிறைவடைந்துவிட்டது.

நாடாளுமன்றம்

வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த விவரங்கள் 

ஆனால், மீதமுள்ள 14 சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின்(11 ராஜ்யசபா மற்றும் 3 மக்களவை எம்பிக்கள்) இடைநீக்கம் இரு அவைகளின் சிறப்புரிமைக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது. கடந்த ஜனவரி 12ஆம் தேதி, மக்களவையின் சிறப்புரிமைக் குழு மூன்று மக்களவை எம்.பி.க்களின் இடைநீக்கத்தை நீக்கியது. ராஜ்யசபா எம்.பி.க்களின் சஸ்பெண்ட் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர், நாளை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கி பிப்ரவரி 9 அன்று முடிவடைகிறது. வரும் வியாழக்கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடியரசு தலைவர் உரை மற்றும் கணக்கு வாக்கெடுப்பு மீதான விவாதங்கள் அன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.