அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான பிரத்யேக அரங்கம் - பணிகள் தீவிரம்
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. ஆண்டுதோறும் இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உள்ளூர், வெளியூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஊருக்குள்ளேயே இப்போட்டி நடத்தப்படுவதால் வருவோருக்கும் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லை என்னும் நிலையில், கிராம மக்களும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே இதற்கான தனி பிரத்யேக அரங்கம் ஒன்றினை கட்டி அதில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு முடிவு செய்தது. அதற்காக அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை மலையடிவாரத்தில் 66 ஏக்கர் அரசின் நிலத்தில் ரூ.44 கோடி செலவில் இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் கட்ட முடிவு செய்து அதற்கான பணிகளும் கடந்த மார்ச் 18ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்ட தமிழக அரசு
கிட்டத்தட்ட 70%பணிகள் நிறைவடைந்த நிலையில் 2024 ஜல்லிக்கட்டு இந்த அரங்கில் நடத்த முடிவு செய்துள்ளது தமிழக அரசு என்று கூறப்படுகிறது. அதனால் இந்த அரங்கின் பணிகளை விரைந்து முடித்து டிசம்பர் மாத இறுதிக்குள் ஒப்படைக்க பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அரங்கில் பார்வையாளர்கள் அமருவதற்கான வசதிகள் மட்டுமின்றி சிறப்பு விருந்தினர்கள் தங்குவதற்கு, உணவருந்துவதற்கான இடங்களும் அமைக்கப்படுகிறது. மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் காளைகள் தங்குமிடம், காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி அளிக்க தனியறைகள் என பல வசதிகள் அமையவுள்ளது. இதனிடையே அலங்காநல்லூரில் காயமுற்ற மாடுபிடிவீரர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்வதற்குள் அதிகளவு ரத்தம் வெளியேறி மரணங்கள் நிகழ்வதால் இந்த அரங்கத்திலேயே அறுவைசிகிச்சை மையங்களோடு மருத்துவர்கள் குழுவும் இருக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.