LOADING...
தவெக-வில் ஐக்கியமான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்; எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் ஆவேச பேச்சு!
எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் ஆவேச பேச்சு

தவெக-வில் ஐக்கியமான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்; எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் ஆவேச பேச்சு!

எழுதியவர் Venkatalakshmi V
Jul 02, 2026
02:36 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட அரசியல் விழாவில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகத்தில் முறைப்படி இணைந்தனர். இதற்காக கரூர், திருச்சி, புதுக்கோட்டை, விராலிமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் கார்களில் தவெக தொண்டர்கள் மாமல்லபுரத்தில் குவிந்தனர். இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய தவெகவின் மூத்த தலைவரும், தமிழக வருவாய்த்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக சாடினார்.

விவரங்கள்

அமைச்சர் செங்கோட்டையன் பேசியதன் முக்கிய விவரங்கள்

"எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிடம் இருந்தது மக்கள் இயக்கம். ஆனால் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது வெறும் கார்ப்பரேட் கம்பெனி தான். அவருக்குப் பின்னால் வெறும் 10 பேர் மட்டுமே இருக்கிறார்கள். எடப்பாடி எதிர்க்கட்சியாகவே இருந்து ஜாலியாக வாழ்க்கையை ஓட்டலாம் என்று நினைத்தார், ஆனால் மக்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்." "திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகலாம் என்று நரியைப் போல நினைத்த வேளையில் தான், கட்சித் தொண்டர்களுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்தத் துரோகத்தை எதிர்த்து, நாட்டை நல்வழிப்படுத்தலாம் என்ற நம்பிக்கையோடு நல்லவர்கள் அனைவரும் இன்று தவெகவை நோக்கி வந்துள்ளனர்."

சதி

"துரோகத்தை தகர்த்தெறிந்த தவெக"

"பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா வழியில் வந்தவர்கள் நாங்கள். என்னுடைய சட்டைப்பையில் இன்றும் ஜெயலலிதாவின் படம் இருக்கிறது. அதை தவெக தலைவர் விஜய் பெருந்தன்மையோடு அனுமதித்துள்ளார். 'நீங்கள் அம்மா படத்தை வைத்துக் கொள்ளுங்கள், அதுதான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்' என்று கூறிய உன்னதத் தலைவர் நம் விஜய்." "ஜெயலலிதாவை 21 நாட்கள் சிறையில் அடைத்தவர்களுடன் (திமுக) கூட்டணி வைக்க அங்கே சதிக்காரர்கள் முயன்றனர். அந்தச் சதியைத் தகர்த்தெறியும் சக்தியாகவே சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆனந்தன் ஆகியோர் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். என்னை தூக்கி எறிந்த நேரத்தில் தாங்கிப் பிடித்து, இன்று என்னை வருவாய்த்துறை அமைச்சராக்கிய தவெக தலைவர் விஜய், நம்பியவர்களைக் காக்கும் அரணாக விளங்குகிறார்" என்றார் செங்கோட்டையன்.

Advertisement