அதிர வைக்கும் ஏஐ மோசடி! உங்கள் போனுக்கு OTP வராமலேயே பணம் திருடப்படலாம்; தற்காத்துக்கொள்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
அகமதாபாத் நகரில் கூகுளின் ஜெமினி ஏஐ போன்ற நவீன செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி, தொழிலதிபர் ஒருவரின் டீப்ஃபேக் வீடியோவை உருவாக்கி அவரது ஆதார் பயோமெட்ரிக் பாதுகாப்பை முறியடித்த நான்கு பேர் கொண்ட கும்பலை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் தொழிலதிபரின் முகத்தைப் போலவே ஏஐ மூலம் போலியான வீடியோவை உருவாக்கி, அதன் மூலம் ஆதார் அமைப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த அவரது மொபைல் எண்ணை மாற்றியுள்ளது. இதன் விளைவாக, வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான ஓடிபி (OTP) எண்கள் அனைத்தும் மோசடி கும்பலின் மொபைல் எண்ணிற்குச் சென்றுள்ளது. ஓடிபி வராமலேயே வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டு, தொழிலதிபரின் பெயரில் ரூ.25,000 கடனும் பெறப்பட்டுள்ளது அந்தத் தொழிலதிபரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தகவல் திருட்டு
ஆதார் பயோமெட்ரிக் மற்றும் டிஜிலாக்கர் தரவுகள் திருட்டு
இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் பொதுச் சேவை மையத்தில் (Common Service Centre) பணியாற்றியவர் என்பதால், அவருக்கு அதிகாரப்பூர்வ ஆதார் சிஸ்டம் மற்றும் கருவிகளை அணுகும் வசதி இருந்துள்ளது. இதனைத் தவறாகப் பயன்படுத்தி, தொழிலதிபரின் டிஜிலாக்கர் (DigiLocker) கணக்கை அணுகி அங்கிருந்த முக்கிய ஆவணங்களைத் திருடியுள்ளனர். தொழிலதிபருக்கு இரண்டு நாட்களாக வங்கியில் இருந்து எந்த ஓடிபி செய்திகளும் வராததைக் கண்டு அவர் சந்தேகமடைந்து போலீஸில் புகார் அளித்ததால்தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. பொதுவாக ஓடிபி சரிபார்ப்பு இன்றி ஆதார் தகவல்களை மாற்ற முடியாது என்ற சூழலில், ஏஐ டீப்ஃபேக் மூலம் நேரடிச் சரிபார்ப்பை (Live Verification) அவர்கள் ஏமாற்றியது புலனாய்வாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதிய அச்சுறுத்தல்
ஏஐ கருவிகளால் வங்கித் துறைக்கு ஏற்படும் புதிய அச்சுறுத்தல்கள்
இச்சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் அதிவேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் இந்தியாவின் வங்கி அமைப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் மைத்தோஸ் (Claude Mythos) போன்ற சக்திவாய்ந்த ஏஐ மாடல்கள் மூலம் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது. தற்போதைய அகமதாபாத் சம்பவம், ஏஐ தொழில்நுட்பம் என்பது வெறும் கற்பனை அச்சுறுத்தல் மட்டுமல்ல, அது நடைமுறையில் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதைக் காட்டுகிறது.
பாதுகாப்பு
இது போன்ற சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?
இத்தகைய அதிநவீன ஏஐ மோசடிகளிலிருந்து தப்பிக்கப் பொதுமக்கள் தங்களது ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை 'ஆதார் லாக்' (Aadhaar Lock) வசதி மூலம் முடக்கி வைப்பது அவசியமாகும். உங்கள் மொபைலுக்கு வர வேண்டிய ஓடிபி செய்திகள் திடீரென நின்றுபோனால், உடனடியாக உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் வங்கியைத் தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் உங்களது உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றைக் கொண்டே ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் டிஜிலாக்கர் போன்ற சேவைகளுக்கு எப்போதுமே இரண்டு அடுக்கு பாதுகாப்பு (Two-Factor Authentication) முறையைப் பயன்படுத்துவதுடன், அவ்வப்போது உங்கள் பயோமெட்ரிக் ஹிஸ்டரியைச் சரிபார்ப்பது உங்களைப் பாதுகாக்கும்.