இலங்கை அதிபர் தேர்தல்; பிரதான வேட்பாளர்களுடன் திடீர் சந்திப்பு நடத்திய அஜித் தோவல்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே மற்றும் பிற தலைவர்களை கொழும்பில் சந்தித்தார். மேலும், செப்டம்பர் 21ஆம் தேதி அங்கு நடக்க உள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பரந்த அளவிலான அரசியல் ஆலோசனைகளை நடத்தினார். விக்ரமசிங்கே தவிர பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மார்க்சிஸ்ட் ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார். இவர்களில் குணவர்தன தவிர, மற்ற அனைவரும் ஜனாதிபதிக்கான போட்டியில் முன்னணியில் உள்ள வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு
அஜித் தோவலின் இலங்கை பயணத்தின் முதன்மை நோக்கம் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் நிறுவன ஆவணங்களில் கையெழுத்திடுவதாகும். இதன் பின்னணியில் அவர் பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து இலங்கை-இந்தியா இடையேயான உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இதில் தமிழ் அரசியல் தலைவர்களும் அடங்கும். இந்த சந்திப்பு குறித்து பேசிய இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான அரசியல் கட்சியின் தலைவர் மனோ கணேசன், "நாங்கள் ஒரு முக்கியமான கலந்துரையாடலை நடத்தினோம். இந்தியா மற்றும் இலங்கை பாதுகாப்பு குறித்து விவாதித்தோம். இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசாங்கத்துடனும் இந்தியா நெருக்கமாகப் பணியாற்றும்." என்று கூறினார்.