நாளை(மே 4ம் தேதி) துவங்குகிறது அக்னி நட்சத்திரம்
தமிழ்நாடு: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்படி சித்திரை மாதம் 21ம் தேதி முதல் வைகாசி மாதம் 14ம் தேதி வரை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படும் நிலையில், அதனை அக்னி நட்சத்திரம் என்று குறிப்பிடுவார்கள். இந்தாண்டு இந்த அக்னி நட்சத்திரமானது மே மாதம் 4ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நீடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த அக்னி நட்சத்திர காலத்தின் பொழுது வெயிலின் தாக்கமானது 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும்.
நண்பகலில் வெளியில் வருவதை தவிர்ப்பது நல்லது - மருத்துவர்கள்
அதன்படி இந்த வெயில் காலத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள், பெண்கள் முதலானோர் நண்பகல் நேரத்தில் வெளியில் வரக்கூடாது. அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்சத்து அதிகமுள்ள பழங்களை வாங்கி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் இந்த காலகட்டத்தில் வெளியில் செல்லும் பொழுது பருத்தி ஆடைகளை அணிந்து கொண்டு, குடைகளை எடுத்து சென்றால் வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்று நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அக்னி நட்சத்திரம் துவங்கும் முதல் 7 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும். பின்னர் 21வது நாளில் வெயில் உச்சத்தினை தொடும். அதன் பின்னர் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறைய துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.