இலங்கையிலும் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது UPI
கடந்த ஆண்டு இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நேற்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரம்சிங்க. டெல்லியில் நேற்று பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்பு நடைபெற்றது. வர்த்தகம், உயர்கல்வி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் வகையில், பல்வேறு ஒப்பந்தங்களில் இருநாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தகளில், இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையைான யுபிஐ-யை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தமும் நேற்று கையெழுத்தாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இலங்கை மக்களும் இந்தியாவின் யுபிஐ சேவையை அந்நாட்டில் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளுக்குமிடையே மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனை எளிமையாக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற நாடுகளில் யுபிஐ-யின் பயன்பாடு:
கடந்த பிப்ரவரி மாதம், இந்தியாவின் யுபிஐ சேவையையும், சிங்கப்பூரின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையையும் இணைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு யுஏஇ-யின் பணப் பரிவர்த்தனை சேவையுடன் யுபிஐ சேவையை இணைத்துப் பயன்படுத்தும் வகையிலான ஒப்பந்தமும் இரு நாடுகளுக்குமிடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தங்களின் மூலம், மேற்கூறிய நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையே மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தடையின்ற மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தியாவின் யுபிஐ சேவையை பிரான்சுக்கு செல்லும் இந்தியர்களும் பயன்படுத்தும் வகையில், அந்நாட்டுடனும் புதிய ஒப்பந்தம் ஒன்றில் சில வாரங்களுக்கு முன்பு இந்தியா கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.