மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று(மே 24) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து, மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதாக உறுதியளித்தார். மும்பையில் நடந்த அவர்களின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தாக்கரே, மத்திய அரசிடம் இருந்து "நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற" எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகிறது என்று தெரிவித்தார். "எங்களை 'எதிர்க்கட்சிகள்' என்று அழைக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். உண்மையில் அவர்களையே(மத்திய அரசு) 'எதிர்க்கட்சி' என்று அழைக்க வேண்டும், ஏனெனில் அவர்கள்தான் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிராக செயல்படுகிறார்கள்" என்று உத்தவ் தாக்கரே மேலும் கூறினார். அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கு இடமாற்றுவதற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான அவசர சட்டத்தை இயற்றிய மத்திய அரசு
மேலும், டெல்லியின் துணைநிலை ஆளுநர், டெல்லி மாநில அரசாங்கத்தின் பேச்சை கேட்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு சார்பாகவும், டெல்லியின் துணைநிலை ஆளுநரும் மத்திய அரசின் பிரதிநிதியுமான வி.கே.சக்சேனாவுக்கு எதிராகவும் வந்திருந்தது. இது நடந்து சில நாட்களுக்குள் மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்தின் மூலம், அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கு இடமாற்றுவதற்கும் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது எதிர்கட்சிகளின் ஆதரவை திரட்டி கொண்டிருக்கிறார். இதன் முதல்படியாக, அவர் நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆதரவை பெற்றார்.