கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்!
"என் அன்னைக்கும் தங்கைக்கும் கவ்வி இல்லை என்றால் அந்த கல்வி எனக்கும் தேவையில்லை" என்று ஆப்கானிஸ்தான் பேராசிரியர் ஒருவர் தன் கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெறிந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு தாலிபான், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதில் இருந்து பெண்களுக்கு எதிராகப் பல தடைகளை விதித்து வருகிறது. ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே செல்ல தடை, டீனேஜ் பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை, பெண்கள் விமானத்தில் பயணிக்க தடை, ஆடை கட்டுப்பாடுகள் போன்ற பல தடைகள் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், கடந்த வாரம், பெண்கள் உயர்கல்வி கற்பதற்கும் தாலிபான் அரசு தடைவிதித்தது. இதை எதிர்த்து பெரும் போராட்டங்களும் கட்டணங்களும் அதிகரித்து வருகிறது.
கல்வி சான்றிதழ்களைக் கிழித்த பேராசிரியர்!
இந்த ஒடுக்குமுறையை எதிர்த்த ஆப்கானிஸ்தான் பல்கலைகழக பேராசிரியர் ஒருவர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தன்னுடை கல்வி சான்றிதழ்களை ஒவ்வொன்றாக கிழித்து எறிந்திருக்கிறார். இதில் முதுகலை, பிஹச்டி போன்ற மதிப்புமிக்க கல்வி சான்றிதழ்களும் அடங்கும். மேலும் அவர், "இன்றிலிருந்து இந்த பட்டங்கள் எனக்கு தேவையில்லை. என் அன்னைக்கும் தங்கைக்கும் கவ்வி இல்லை என்றால் அந்த கல்வி எனக்கும் தேவையில்லை." என்று கூறி இருக்கிறார். ஐ.நா கண்டனம்: தாலிபான் அரசின் இந்த தடைக்கு ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையை வெளியிட்ட ஐ.நா, "ஆப்கான் அரசு உடனடியாகக் அதன் கல்விக்கொள்கையை திருத்தி அமைக்க வேண்டும். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.