ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு
ராணுவத்துறை சார்பில் பெங்களூர் எலகங்கா விமானப்படை தளத்தில், 1996ம்ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த 'ஏரோ இந்தியா' என்னும் சர்வதேச கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு நாடுகளின் விமானங்கள், விமான தயாரிப்பு உபகரணங்கள் முதலியன காட்சிப்படுத்தப்படும். அதன்படி, 14வது சர்வதேசவிமான தொழில் கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படைத்தளத்தில் இன்று(பிப்.,13) துவங்கி வரும் 17ம்தேதி வரை நடைபெறவுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியினை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஏரோ இந்தியா கண்காட்சி இந்தியாவின் புதிய பலத்தையும், திறமையையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார். தொடர்ந்து, பெருகிவரும் இந்தியாவின் திறமைக்கு 'ஏரோ இந்தியா 2023' சிறந்த சான்றாகும். இதற்கு உதாரணமாக 'தேஜஸ்' விமானத்தை கூறலாம் என்றும் கூறினார்.
ஏரோ இந்தியா கண்காட்சியில் உலக நாடுகளில் இருந்து 700க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றுள்ளதாக தகவல்
மேலும் பேசிய அவர், இதில் 100நாடுகள் பங்குபெற்றுள்ளது உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை அதிகரித்துள்ளது என்பதை உணர்த்துகிறது. இந்தியா உள்பட உலக நாடுகளில் இருந்து 700க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றுள்ளார்கள், இதுகடந்த காலத்தின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. பல ஆண்டுகளாக மிகபெரிய பாதுகாப்பு இறக்குமதியாளராக இருந்த இந்தியா தற்போது உலகின் 75நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது. கடந்த 5ஆண்டுகளில் பாதுகாப்பு ஏற்றுமதி என்பது 6மடங்காக அதிகரித்துள்ளது. அதன்படி, 2021-22ம்ஆண்டில் இதுவரை ரூ.12கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு உற்பத்தி நாடுகளில் இந்தியாவும் சீக்கிரம் இணையும், எனவே தனியார் நிறுவனங்களை இந்தியாவின் பாதுகாப்பு துறையில் முடிந்தவரை முதலீடு செய்ய அழைக்கிறேன் என்று அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.