'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
ராணுவத்துறை சார்பில் பெங்களூர் எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், 1996ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஏரோ இந்தியா என்னும் சர்வதேச கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு நாடுகளின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், விமான தயாரிப்பு உபகரணங்கள் முதலியன காட்சிப்படுத்தப்படும். இதில் பெரியளவில் வர்த்தகமும் நடைபெறும். ஆசியாவிலேயே மிக பெரிய விமான கண்காட்சியான இது கடந்த 2021ம் ஆண்டு நடந்து முடிந்ததையடுத்து, 2023ம் ஆண்டிற்கான 14வது கண்காட்சி வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது என்று ராணுவத்துறை சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஏரோ இந்தியா 2023' பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
நடக்கவுள்ள இந்த ஐந்து நாள் நிகழ்வானது விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கான முக்கிய வர்த்தக கண்காட்சியாக கருதப்படுகிறது. இந்த மாபெரும் கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 'ஏரோ இந்தியா 2023'ன் இணையத்தளத்தில் இதுவரை நடக்கவிருக்கும் இந்த 5 நாள் நிகழ்வுக்கு மொத்தம் 737 பார்வையாளர்கள் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளார்கள். இதில் 643 பேர் இந்திய பார்வையாளர்கள், 94 பேர் 30 வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு https://aeroindia.gov.in என்னும் இணையத்தளத்தை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 2021ம் ஆண்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இம்முறை அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.