LOADING...
அதிமுக 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஸ்டாலின், உதயநிதியை எதிர்க்கப்போவது யார்? முழு விவரம்
அதிமுக 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுக 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஸ்டாலின், உதயநிதியை எதிர்க்கப்போவது யார்? முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 29, 2026
10:36 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவிருக்கும் 17வது சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்த நிலையில், தற்போது 17 தொகுதிகளுக்கான 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக நேரடியாகப் போட்டியிடும் 167 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் உறுதி செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களைக் களம் இறக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியுள்ளார்.

கொளத்தூர்

கொளத்தூர் மற்றும் சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை

இந்தத் தேர்தலின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மோதல்கள் சென்னை மாவட்டத்தில்தான் அரங்கேறவுள்ளன. கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து, அதிமுக சார்பில் சந்தானகிருஷ்ணன் களம் காண்கிறார். அதேபோல், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து, அதிமுகவின் சீனியர் நிர்வாகி ஆதிராஜாராம் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதிகளில் திமுகவின் முக்கியத் தலைவர்களைக் கட்டிப்போட வேண்டும் என்ற இபிஎஸ்ஸின் வியூகம் இதில் அப்பட்டமாகத் தெரிகிறது.

சென்னை

சென்னையில் அதிமுகவின் நேரடி மல்லுக்கட்டு

சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் அதிமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. ஏற்கனவே ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது எஞ்சிய 12 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.வளர்மதி, தியாகராய நகரில் சத்தியநாராயணன் எனப் பரிச்சயமான முகங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 12 தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேர் மோதுவது தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது.

Advertisement

மூன்று கட்டங்கள்

மூன்று கட்டங்களாக வேட்பாளர் அறிவிப்பு

அதிமுக தனது வேட்பாளர் தேர்வில் மிகவும் நிதானமாகவும், தொகுதி நிலவரங்களை ஆராய்ந்தும் முடிவெடுத்துள்ளது. மார்ச் 25 இல் முன்னாள் அமைச்சர்கள் 23 பேரை உள்ளடக்கிய முதல் பட்டியலையும், மார்ச் 27 இல் 127 பேர் கொண்ட மெகா பட்டியலையும் வெளியிட்டது. தற்போது கடைசி கட்டமாக 17 பேரை அறிவித்து மொத்தம் 167 இடங்களில் அதிமுக நேரடியாகக் களம் காண்கிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 121 தொகுதிகளில் திமுக - அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுவது, இது இரு கட்சிகளுக்கும் வாழ்வா சாவா போராட்டம் என்பதை உணர்த்துகிறது.

Advertisement

முக்கிய வேட்பாளர்கள்

3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் - முக்கிய பெயர்கள்

அதிமுக வெளியிட்டுள்ள இந்த 17 பேர் கொண்ட பட்டியலில் முக்கியத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்வருமாறு:- கொளத்தூர்: சந்தான கிருஷ்ணன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: ஆதிராஜாராம் அண்ணா நகர்: கோகுல இந்திரா ஆயிரம் விளக்கு: பா. வளர்மதி வில்லிவாக்கம்: எஸ்.ஆர். விஜயகுமார் வேளச்சேரி: எம்.கே. அசோக் தியாகராய நகர்: சத்தியநாராயணன் மேலும் விருகம்பாக்கத்தில் விருகை வி.என்.ரவி மற்றும் துறைமுகத்தில் ராயபுரம் மனோ ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

தேர்தல் வியூகம்

இபிஎஸ்ஸின் தேர்தல் வியூகம் என்ன?

இந்த முறை வேட்பாளர் தேர்வில் எடப்பாடி பழனிசாமி மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். திமுகவின் வலுவான தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அந்தந்தப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க அதிமுகவினரை நிறுத்துவதன் மூலம், ஆளுங்கட்சியின் கவனத்தைச் சிதறடிக்கத் திட்டமிட்டுள்ளார். குறிப்பாகத் தனித் தொகுதிகளான திருவிக நகர் (பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்), எழும்பூர் (அபிஷேக் ரங்கசாமி) மற்றும் திட்டக்குடி (முருகுமாறன்) ஆகியவற்றில் புதிய வியூகங்களை வகுத்துள்ளார். ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள இந்தத் தேர்தல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement